சைக்கி விண்கலமும் ஆழ்வெளித் தகவல் தொடர்பும்

நமது சூரிய குடும்பத்தில் மர்மங்களைப் புரிந்து கொள்ள, சைக்கி (Psyche) என்ற விண்கலம் 2023 அக்டோபர் 13 ஆம் தேதி, அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் ஹெவி ராக்கெட்டின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.  இந்த விண்கலம் வியாழன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு இடையேயுள்ள 16-சைக்கி என்ற ஒரு உலோக வகையிலான விண்கல்லை நோக்கிப் பயணம் செய்கிறது. இது 2029 முதல் இந்த விண்கல்லை ஆய்வு செய்யும்.
சைக்கி விண்கலத்தின் தகவல் தொடர்பு
பூமியை விட்டு வெகு தொலைவில்  இருந்தும் கூட பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்காகச், சைக்கி விண்கலம் ஒரு புதுமையான தகவல் தொடர்பு முறையைக் கொண்டுள்ளது.

ஆழ்வெளி ஒளித் தொடர்பு (Deep Space Optical Communication )
சைக்கி விண்கலத்தின் முதன்மைத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்  ஆழ்வெளி ஒளித் தொடர்பு என்பதை அடிப்படையாகக் கொண்டது.   இந்த நவீன அமைப்பு, வழக்கமான வானொலி அலைத் தகவல் தொடர்பு முறையை விட மிகவும் மேம்பட்டது. இந்த முறையில் தகவல்களை ஒளியணுக்களின்  (photons) வாயிலாக அனுப்ப அருகாமை-அகச்சிவப்பு (near infrared) லேசரைப் பயன்படுத்துகிறது. கிட்டத்தட்ட 1.6 கோடி கிலோமீட்டர்கள்  தொலைவில் இருந்தும் (புமியிலிருந்து நிலவு இருப்பதைக் காட்டிலும் சுமார் 40 மடங்கு அதிக தூரம்) லேசர் மூலம் தகவல்களை வெற்றிகரமாக, கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தின்  (Caltech) பாலோமார் வானோக்கி மையத்தின்  ஹேல் தொலைநோக்கிக்கு அனுப்பியுள்ளது.

ஆழ்வெளி ஒளித் தொடர்பின் மூலம்,  விண்வெளித் தொலைத்தொடர்புகள்  பயன்படுத்தும் தற்போதைய வானொலி அதிர்வெண் அமைப்புகளை விட 10 முதல் 100 மடங்கு அதிகமான தகவல்களை ஒளி வாயிலாகப் பரிமாற்றம் செய்ய முடியும்.
வானொலி அலைகளுக்குப் பதிலாக ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த நேரத்தில் அதிகத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இது உயர்தரமான  படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கு அவசியமாகிறது.

மேலும் இந்த விண்கலத்தில் ஆழ்வெளி ஒளித்தொடர்புடன் (DSOC)  கூடுதலாக,  ஒளி வாயிலான தொடர்பு துண்டிக்கப்பட்ட சமயங்களில்  பயன்படுத்துவதற்கென, வழக்கமான வானொலி அலை அதிர்வெண் (radio wave frequency) அமைப்பு சைக்கி விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதில்,
மாக்ஸார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 6.5 அடி (2 மீட்டர்) நிலையான உயர் ஈட்டம் (high gain) கொண்ட ஆண்டெனா மற்றும்
ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் வடிவமைத்து தயாரித்த மூன்று சிறிய ஈட்டம் (low gain) கொண்ட ஆண்டெனாக்கள், ஆகியவை அடக்கம்.

லேசர்கள் வானொலி அலைகளை விட அதிக அதிர்வெண் கொண்ட அகச்சிவப்பு ஒளியைப் பயன்படுத்துகின்றன. எனவே அவை ஒவ்வொரு விநாடியும் அதிக தரவை அனுப்ப முடியும். இது பெரிய அளவிலான தரவை, எடுத்துக்காட்டாக, கோள்கள் மற்றும் நிலவுகளின் விரிவான படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்பத் தேவையான வேகமான விண்வெளி அலைப்பட்டையை (space broadband) உருவாக்க முடியும். லேசர்கள் தற்போதைய வானொலி அலை அமைப்புகளை விட 100 முதல் 1000 மடங்கு அதிக தரவைக் கொண்டு செல்ல முடியும்.

லேசர்கள் மிகவும் குவிந்த கற்றைகளைக் கொண்டவை.  அதாவது விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்  மற்றும் பூமியின் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்கள் இரண்டிலும் சிறிய அளவிலான ஆண்டெனாக்களைப் பயன்படுத்தினாலே போதுமானது.


சமீபத்தில் சைக்கி விண்கலத்தின் ஆழ்வெளி ஒளித் தொடர்பு, அதன்  லேசர் மூலம் பூமிக்கு சோதனைத் தகவல்களை அனுப்பியது.
இது அதிகபட்சமாக  வினாடிக்கு 267 மெகாபிட்ஸ்  (Mbps) என்ற வீதத்தில் தகவல்களை அனுப்பும் திறனைக் காட்டியுள்ளது.  இது பிராட்பேண்ட் இணையத்தின் பதிவிறக்க வேகத்திற்கு இணையானது.

—–

1.” பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா “

https://notionpress.com/read/pirapanjathirkul-oru-sutrula

Kindle edition

Google Play Books

2. “விண்வெளிப் பயணங்களின் வரலாறு”

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru

Kindle edition

Google Play Books

மீண்டெழுந்த வாயேஜர் 1

பூமியிலிருந்து மிகத் தொலைவில் சென்றுகொண்டிருக்கும்   விண்கலமான வாயேஜர் 1, கடந்த நவம்பர் மாதம் முதல் சில தொழில்நுட்பக்கோளாறுகளால், புரிந்துகொள்ள முடியாத சிக்கலான தகவல்களை அனுப்பி வந்தது. 24 பில்லியன் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள இந்த விண்கலம், நாசா பொறியாளர்களால் புரிந்துகொள்ள முடியாத  மிகவும் சிக்கலான அரைகுறையான தரவுகளை  அனுப்பத் தொடங்கியது.  இருப்பினும், மாதக்கணக்கான கடின உழைப்பிற்குப் பிறகு, நாசாவின் குழு இத்தகைய சிக்கல்களைத் தீர்க்க முடிந்தது.

குறிப்பிடத்தக்க திருப்பமாக, ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வாயேஜர் 1 தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்களை பூமிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்த சிக்கல் விண்கலத்தின் ஃப்ளைட் டேட்டா சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறால் ஏற்பட்டது. நாசா பொறியாளர்கள்  செயல்பட்டு பழுதடைந்த சில்லின் (chip)  நிரல்களை (code) பல்வேறு பகுதிகளாகப் பிரித்து  உடைத்து, சிஸ்டத்தின் நினைவகத்தின் (memory) பிற பகுதிகளில் ஏற்றி சிக்கலைச் சரி செய்துள்ளனர்.

இந்த முயற்சியில் வெற்றிகரமான பழுதுபார்ப்பு என்பது வாயேஜர் 1 விண்மீனிடவெளியில் இருந்து மீண்டும் அர்த்தமிகு அறிவியல் தரவை வழங்க ஏதுவாக மீண்டும் தயாராகும் நிலையாகும். என்பதாகும்.  இந்த நிகழ்வு வாயேஜர் குழுவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ளது. மேலும் இந்த விண்கலம் தொடர்ந்து பிரபஞ்சம் குறித்த நமது புரிதலுக்கு பங்களிக்க முடியும்.

வாயேஜர் 1 விண்கலம் 1977 இல் ஏவப்பட்டு, பிரபஞ்சத்தின் தொலைதூரங்க்ளை நோக்கி அதன் நீண்ட பயணத்தை இன்றும் தொடர்கிறது.

—–

1.” பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா “

https://notionpress.com/read/pirapanjathirkul-oru-sutrula

Kindle edition

Google Play Books

2. “விண்வெளிப் பயணங்களின் வரலாறு”

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru

Kindle edition

Google Play Books

https://t.me/tamilphysics

நோவாவாக வெடிக்கவிருக்கும் நட்சத்திரம்

டி கொரோனே போரியாலிஸ், ( T CrB என்று குறிப்பிடப்படுகிறது) என்னும் வெள்ளைக்குள்ளன் நட்சத்திரம்,   தொடர்ச்சியாகப் பலமுறை நிகழும் ஒரு நோவா அமைப்பாகவுள்ளது. இது தற்போது முதல் செப்டம்பர் 2024 க்கு இடையில் ஒரு  நோவாவாக வெடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பானது இந்நட்சத்திரத்தின் முந்தைய   மற்றும் சமீபத்திய அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.

T CrB என்பது மீண்டும் மீண்டும் நிகழும் நோவா என்று வகைப்படுத்தப்படும் இரட்டை நட்சத்திர அமைப்பு ஆகும். இதில் ஒரு சிவப்பு ராட்சதன் நட்சத்திரம் மற்றும் ஒரு வெள்ளை குள்ளன் நட்சத்திரம் ஆகியவை ஒன்றையொன்று சுற்றி வருகிறது.

  வரலாற்று ரீதியாக, டி CrB தோராயமாக 80 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெடித்துள்ளது.  அதன் கடைசியாக பதிவு செய்யப்பட்ட வெடிப்பு 1946 இல் நிகழ்ந்தது.

T CrB பிரகாசத்தில் ஏற்ற இறக்கம் தொடங்கியிருப்பதைக் கவனித்த வானியலாளர்கள், இது மற்றொரு வெடிப்புக்கு தயாராகி வருவதற்கான அறிகுறியாகும் என்று தெரிவித்துள்ளளனர்.
T CrB வெடிக்கும் போது, அது இரவு வானில் வெறும் கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பிரகாசமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது துருவ நட்சத்திரமான போலாரிஸ் அளவுக்கு பிரகாசமாக மாறும்.

இந்த இரட்டை நட்சத்திரத்தில் சிவப்பு ராட்சத நட்சத்திரத்திலிருந்து வெள்ளைக் குள்ள நட்சத்திரத்திற்கு நிறைப் பரிமாற்றம் நடக்கும் போதும் இத்தகைய நோவாக்கள் நிகழும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு வானியலாளர்கள் மற்றும் தன்னார்வ விண்வெளி ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த நிகழ்வை எதிர்நோக்கிக் காத்துள்ளனர்.

இதே போல பல்வேறு தகவல்களை எனது படைப்புகளான

1.” பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா “

என்னும் புத்தகம் வாயிலாகவும்

https://notionpress.com/read/pirapanjathirkul-oru-sutrula

Kindle edition

Google Play Books

2. “விண்வெளிப் பயணங்களின் வரலாறு”

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru

Kindle edition

Google Play Books

என்ற புத்தகம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.