விண்வெளிக்குச் செல்லும் மற்றுமொரு Golden Record

வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 விண்கலங்கள் 1977 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக ஏவப்பட்டன. இந்த விண்கலங்கள் சூரிய மண்டலத்தைக் கடந்து வெளியே செல்லும் சாத்தியம் இருந்ததால், வேற்றுக் கிரக வாசிகள் எதிர்காலத்தில் இவற்றைக் கண்டறியும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதப்பட்டது. அப்படி நடந்தால், அவர்களுக்குப் பூமியைப் பற்றிய தகவல்களைக் கொடுப்பதற்காக, நாசா இந்த விண்கலங்களில் தங்கத் தகடுகளைப் பொருத்தியது. Golden  Records என்னும் இந்த தகவல் வட்டுகள் வாயேஜர் விண்கலங்களில் பொதித்து வைக்கப்பட்டிருந்தன.

 

Image credit : NASA/JPL

அதே போல மற்றொரு தகவல் வட்டு விண்வெளிக்குச் செல்ல இருக்கிறது. 

வியாழனின் நிலவான  யூரோபாவில் , அதன் தரையில் உள்ள  பனிக்கட்டியின் கீழ்  கடல் இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.  மேலும் அது நமது பூமியின் அனைத்து கடல்களின் மொத்த தண்ணீரைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக தண்ணீரைக் கொண்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

நாசாவின் யூரோபா கிளிப்பர் விண்கலம், 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வியாழனை நோக்கி ஏவப்படும் போது, அதனோடு பூமியிலிருந்து ஒரு சிறப்புச் செய்தியை ஒரு சிறப்புத் தகட்டில் சுமந்து  செல்லும்.

இங்கு காணப்படும் ஒரு முக்கோண வடிவிலான உலோகத் தகடு, அத்தகைய சிறப்பு தகவல்களைக் கொண்டிருக்கும். 

இந்த தகடு டான்டலம் என்ற உலோகத்தால் ஆனது. இது சுமார் 18 சென்டிமீட்டர் (7 அங்குலம்) அகலமும் 28 சென்டிமீட்டர் (11 அங்குலம்) நீளமும் கொண்டது. 

இந்த தகட்டில் ட்ரேக் சமன்பாடு இடம்பெற்றுள்ளது. இந்த சமன்பாடு 1961 ஆம் ஆண்டில் வானியலாளர் ஃபிராங்க் ட்ரேக் என்பவரால், பூமியைத் தவிர்த்த வேறு ஏதாவது கிரகத்தில் மேம்பட்ட நாகரிகங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக உருவாக்கப்பட்டது. 

இந்த தகட்டில் விண்வெளித் தொடர்புக்கு ஏற்றதாகக் கருதப்படும் வானொலி  அலை அதிர்வெண்கள் (frequency) குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக இந்த வானொலி அலைவரிசையை மனிதகுலம், விண்வெளியில் இருந்து வரும் செய்திகளை கேட்கப் பயன்படுத்துகிறது. இந்த குறிப்பிட்ட அதிர்வெண்கள், விண்வெளியில் நீரின் மூலக்கூறுகளால் வெளியேற்றப்படும் வானொலி அலைகளுடன் பொருந்துகின்றன. மேலும் வானியலாளர்களால் இவை “தண்ணீர் துளை ” (water hole) என அழைக்கப்படுகின்றன. இந்த தகட்டில், இவை வானொலி அலை உமிழ்வு கோடுகளாக (radio emission lines) சித்தரிக்கப்பட்டுள்ளன. 

இந்த தகட்டில் கோள்களின் அறிவியலின் முன்னோடிகளில் ஒருவரான ரான் கிரீலி என்பவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு யூரோபா  நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை உருவாக்குவதற்கான அவரது ஆரம்ப கால முயற்சிகள் யூரோபா கிளிப்பர் விண்கலத்திற்கு அடித்தளம் இட்டன. 

தகட்டின் மறுபக்கத்தில் “வாட்டர்” என்ற வார்த்தையின் ஒலி அலைவரிசைகள் பல்வேறு மொழிகளில் காட்டப்பட்டுள்ளன. 

உலகின் பல்வேறு மொழிகளுடன், இந்திய மொழிகளில் தமிழ், அசாமியம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம்,மலையாளம், ஒடியம், பஞ்சாபி, சமக்கிருதம், தெலுங்கு மற்றும் துளு ஆகிய மொழிகளில் இந்த ஒலி அலை வரிசையில் நீர் என்னும் ஒலி ஓசை இந்த தகட்டில் பதியப்பட்டுள்ளது

தமிழில் இந்த ஒலி அலை வரிசையை இங்கு காணலாம்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படவிருக்கும் யூரோபா கிளிப்பர், 2030 ஆம் ஆண்டில் வியாழனை அணுகி, வியாழனின் யூரோபா என்ற நிலவைச் சுற்றி சுமார் 50 முறை பறந்து செல்லும். இந்த திட்டத்தின் முதன்மையான அறிவியல் இலக்கு, யூரோபாவின் தரைப்பரப்பின் கீழ்  உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை தீர்மானிப்பதாகும்.

 இந்த திட்டத்தின் மூன்று முக்கிய அறிவியல் நோக்கங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

(1) யூரோபா நிலவின் தரைப்பகுதியின், பனியின் தடிமன் மற்றும் அதன் கீழே உள்ள கடலுடன் அது கொண்டுள்ள தொடர்புகளைத் தீர்மானித்தல், 

(2) அதன் பனிக்கட்டி மற்றும் கடலின் வேதிக்கலவைகளை  ஆராய்தல் 

(3) யூரோபாவின் புவியியலை வகைப்படுத்துதல்.

 யூரோபாவின் விரிவான ஆய்வு, நம் கிரகத்திற்கு அப்பாற்பட்ட சூழலில், உயிர்கள் வாழ்வதற்கு உகந்த கிரகங்களின்  பல்வேறு தகவல்கள் குறித்து விஞ்ஞானிகள் சிறப்பாகப் புரிந்து கொள்ள உதவும்.

இதே போல பல்வேறு தகவல்களை எனது படைப்புகளான

1.” பிரபஞ்சத்திற்குள் ஒரு சுற்றுலா “

என்னும் புத்தகம் வாயிலாகவும் 

https://notionpress.com/read/pirapanjathirkul-oru-sutrula

Kindle edition

Google Play Books

2. “விண்வெளிப் பயணங்களின் வரலாறு”

https://notionpress.com/read/vinveli-payanagalin-varalaru

Kindle edition

Google Play Books

 என்ற புத்தகம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.